கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கான கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இது தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் அறிவித்துள்ளார்.
இதன்படி, பொரள்ளை, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனிவீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்த்தப்படவுள்ளன.
நாளை (23) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்த பகுதிகளில் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாதமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கொம்பனிவீதி பொலிஸ் பிரிவின் சகந்த கிராம உத்தியோக்தர் பிரிவும் மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் உரை தனிமைப்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலுள்ள 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், கரையோரம், ஆட்டுப்படித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொட, வாழைத்தோட்டம், மருதானை, புறக்கோட்டை, டாம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல மற்றும் கடவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாரள காலை 5 மணியுடன் தளர்த்தப்படுகின்றது.
எனினும், கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு, ராகம, வத்தளை, பேலியகொட மற்றும் களனி ஆகிய பகுதிகளுக்காக ஊரடங்கு அவ்வாறு தொடர்ந்தும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவிலுள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, போகஹவத்தை, பமுணுமுல்ல (முஸ்லிம்), கிரிமன்துடாவ, கொராவல, அடலுகம, பமுனுமுல்ல, கலகஹமண்டிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.