சட்டவிரோத காடழிப்பு பெருமளவில் பரவாலாக இடம்பெற்று வருவது தொடர்பாக கவலை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங் கண்டு காடழிப்பு இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.
இது போன்ற முயற்சிகளை தடுக்க முப்படையினரும் பொலிஸாரும் விழிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பணித்துள்ள அதேவேளை விமானப்படை தமது வளங்களை பயண்படுத்தி வான்வழி கண்காணிப்புக்களை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
நாரஹென்பிட்டவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நேற்று (25) இடம்பெற்ற மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதுடன் “எமது எதிர்கால சந்ததியினருக்காக வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
மேலும் வனவளங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள்/ அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் இயற்கை வளங்கள் அழிவடைந்து செல்வதற்கு எதிராக செயற்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.