எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
தனது முதல் போட்டியில் காலி கிளெடியேடர்ஸ் அணியை 8 விக்கெட்டுகளால் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிகொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிளெடியேடர்ஸ் அணி ஆரம்பத்தில் சற்று சிரமத்துக்குள்ளானது. 13.1 ஓவர்களில் 92 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. தனுஸ்க குணதிலக்க 38 ஓட்டங்களையும், பானுக்க ராஜபக்ஸ 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதிரடி காட்டிய அணித்தலைவர் சஹீட் அப்ரிடி 23 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 51 ஓட்டங்களைக் குவித்தார். ஷெஹான் ஜயசூரிய 17 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, காலி கிளெடியேடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் டி ஒலிவ 4 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
177 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியது. மினோத் பானுக்க, டொம் மூர்ஸ் ஆகியோர் தலா 18 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர். 7.4 ஓவர்களில் 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அவிஸ்க பெர்ணான்டோ மற்றும் சொஹைப் மாலிக் ஜோடி சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் வீழ்த்தப்படாத மூன்றாம் விக்கெட்டுக்காக 71 பந்துகளில் 110 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அவிஸ்க பெர்ணான்டோ 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 92 ஓட்டங்களையும், சொஹைப் மாலிக் 27 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர். ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றியிலக்கை எட்டியது.