உயிரிழந்த ஆர்ஜென்டீனாவின் கால்பந்தாட்ட ஜாம்பவான் டியகோ மரடோனாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவரை பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டியகோ மரடோனாவின் சட்டத்தரணி மட்டியால் மொரையா மரடோனாவிற்கு அவசர சிகிச்சைப் பிரிவினர் உடனடியாக சிகிச்சை வழங்கவில்லை, அம்புலன்ஸ் வாகனம் வர அரை மணிநேரம் தாமதமாகியது என குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அத்துடன் மரடோனாவின் மகள்களும் தங்கள் தந்தையின் மரணம் மற்றும் சிகிச்சை தொடர்பில் விசாரணையைக் கோரியதாகக் கூறப்படுகிறது.
எனவே இது தொடர்பில் முழுமையான விசாரணைக்கான வேண்டுகோள்களை விடுக்கப்போவதாக மரடோனாவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
ப்யூனோஸ் எயர்ஸ் நகரிலுள்ள 39 வயதான வைத்தியர் லியபோல்டோ லூக்கின் கிளினிக் மற்றும் வீட்டுக்கு 20 பொலிஸ் அதிகாரிகள் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
வைத்தியர் லூக்கின் வீட்டில் கணினிகள், கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் மருத்துவ குறிப்புகளை மீட்டெடுத்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை குறிப்பிட்ட வைத்தியருக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கும் எதிராகவே குற்றச்சாட்டுகள் எதனையும் சுமத்தவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.