ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட பத்திரிகையாளர் ஒருவருக்கு அந்த நாடு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளது. ருஹுல்லாஹ் ஸாம் என்ற பத்திரிகையாளரையே ஈரான் அரசாங்கம் தூக்கிலிட்டுள்ளது.
ஈரானில் கிளர்ச்சியை உருவாக்குவதற்காக தகவல் செயலியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஈரான் அரசாங்கம், அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
அமாட் நியுஸ் என்ற அரசாங்கத்திற்கு எதிரான இணையத்தளத்தை நடத்திய ருஹுல்லாஹ் ஸாம் கிளர்ச்சியை தூண்டினார் என ஈரான் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
பிரான்சில் வசித்து வந்த ருஹுல்லாஹ், கடந்த வருடம் ஈராக் சென்றபோது, கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருடைய அமாம் செய்தி சேவையை டெலிகிராமில் மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
குறிப்பிட்ட செயலி ஈரானில் கிளர்ச்சிகள் குறித்த படங்களையும், செய்திகளையும் வெளியிட்டு வந்துள்ளது. ஈரான் அரசாங்கம் இந்த செயலியை முடக்கிய போதிலும், அது பின்னர் வேறு ஒரு பெயரில் வெளியாகியிருந்தது.
பத்திரிகையாளருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள், கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரத்தின் மீது மோசமான தாக்குதல் என பிரான்ஸ் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.