web log free
January 11, 2025

‘புதிய அரசமைப்பில் வடக்கு – கிழக்கு ஒரு பிராந்தியமாக இருத்தல் வேண்டும்’

புதிய அரசமைப்பில் மத்திய மற்றும் பிராந்தியங்களின் ஐக்கியத்தைக் கொண்டதாக அரசு முறைமை அமைய வேண்டும். அதில் ஒரு பிராந்தியமாக தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு – கிழக்கு இருத்தல் வேண்டும் என புதிய அரசமைப்பை உருவாக்கத்துக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மக்கள் கூட்டத்துக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால் அவர்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் வெளிப்புற சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை நினைவுபடுத்துகின்றோம் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்கு கூட்டமைப்பின் யோசனைகளைக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அனுப்பிவைத்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி – தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவற்றின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இந்தக் கருத்துக்களைத் தாம் முன்வைக்கின்றார் எனத் தெரிவித்து சம்பந்தன் மேற்படி குழுவுக்கு கூட்டமைப்பின் யோசனைகளை அனுப்பிவைத்தார்.

21 பக்கங்களைக் கொண்ட இந்த யோசனை திட்டத்தில் மேலும் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-

13 ஆவது திருத்தத்துக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்ட அனைத்து யோசனைகளும், இணக்கப்பாடுகளும், வாக்குறுதிகளும் ஒற்றையாட்சியை விடுத்து சமஷ்டிக் கட்டமைப்பிலான ஆட்சி முறையைத்தான் பிரேரித்திருந்தன.

புதியதொரு அரசமைப்பு வரையப்படுமாக இருந்தால் அர்த்தமுள்ள விதமாக அரச அதிகாரங்கள் பகிரப்படுவது அதன் மையப் பொருளாக இருக்க வேண்டும்.

மத்திய மற்றும் பிராந்தியங்களின் ஐக்கியத்தைக் கொண்டதாக அரசு முறைமை அமைய வேண்டும். அதில் ஒரு பிராந்தியமாக தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு – கிழக்கு இருத்தல் வேண்டும்.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்றும் அரச கரும மொழியாக வேண்டும்.

நாடாளுமன்றத்துக்குப் பதில் கூறக் கூடிய சம்பிரதாயபூர்வ ஜனாதிபதி பதவியில் இருப்பார். பிரதமரின் ஆலோசனைப்படி அமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பார். அமைச்சர்களின் அமைச்சுக்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதமரிடம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் பிராந்திய சபையின் அங்கீகாரத்துக்கு அமைய முதலமைச்சர் வழங்கும் பரிந்துரைப்படி ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.

பின்வரும் துறைகளில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்:-

காணி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, சுகாதாரம், வீடமைப்பு மற்றும் கட்டடங்கள், விவசாயமும் விவசாய சேவையும், நீர்ப்பாசனம், கடற்றொழில், விலங்கு வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீள்குடியமர்வும் புனர்வாழ்வும், உள்ளூராட்சி நிர்வாகம், பிராந்திய பொதுச்சேவைகள் மற்றும் கலாசார விடயங்கள், கூட்டுறவு மற்றும் கூட்டுறவு வங்கிகள், தொழிற்சாலைகள், வரி விதிப்பு, மத்திய நிதியளிப்பு, சர்வதேச மற்றும் உள்ளூர் கடன்கள், மானியங்கள் வெளிநாட்டு நேரடி முதலீடுகள்.

நீதித்துறையில் அரசமைப்பு நீதிமன்றங்கள் தனியாக இருக்க வேண்டும். பிராந்திய மேல் நீதிமன்றங்களே அடிப்படை உரிமை மீறல் குற்றங்களை விசாரிக்கும் நியாயாதிக்கம் கொண்டவையாக இருக்க வேண்டும்.

பிராந்திய முதலமைச்சரின் இணக்கத்துடன்தான் பிராந்தியங்களில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்படலாம். அது பின்னர் பிராந்திய சபைகளினால் அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.

காணி அதிகாரம் பிராந்தியத்துக்குப் பகிரப்பட வேண்டும்.

சட்டமும் ஒழுங்கும் பிராந்தியங்களுக்குப் பகிரப்பட்டமையால் தேசியப் பொலிஸ் போன்று ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் பிராந்திய பொலிஸ் இருத்தல் வேண்டும்.

இந்த விடயங்கள் அந்த யோசனைத் திட்டத்தில் விரிவாக உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 பங்காளிக் கட்சிகளின் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒப்பமிட்டு இந்த யோசனைத் திட்டத்தை அனுப்பிவைத்துள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd