web log free
September 26, 2023

வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்று

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பவுள்ளது.

பிரேரணையை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு சமர்ப்பிப்பார்.

வரவு - செலவு திட்டத்ததை முன்வைக்கவேண்டிய காலப்பகுதியில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதால், கடந்த வருடம் வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக, முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த டிசெம்பர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

அதில், இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்காக 1765 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதுடன், அதில் வெளிநாட்டு கடன்களுககு செலுத்த வேண்டிய தவணை தொகையாக 970 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த தொகையில் 55 சதவீதம் வெளிநாட்டு கடன்களுக்கான திருப்பி செலுத்தும் தொகையாக காணப்பட்ட நிலையில்,  2019 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று முன்வைக்கப்படும் வரவு - செலவுத்திட்டம் மீதான  விவாதம் நாளை மறுநாள் புதன்கிழமை ஆரம்பமாவதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அத்துடன், வரவு -செலவுத்திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழுநிலை விவாதங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் மொத்த செலவினம் இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி ரூபாயாகும்.

இந்த  வரவு - செலவுத் திட்டம் தொடர்பான செலவின மதிப்பீட்டு பிரேரணை கடந்த மாதம் ஐந்தாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை,  நாளை முன்வைக்கப்படவுள்ள  வரவு - செலவுத் திட்டத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களை மேம்படுத்துவது தொடர்பான பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த வரவு  - செலவுத்திட்டமானது பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்று தயாரிக்கப்பட்டதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:41