மாளிகாவத்தை என்.எச்.எஸ்.வீட்டுத் திட்டம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலினால் கொழும்பு மாவட்டமே அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகி வரும் மாவட்டமாக அண்மையில் அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம், கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, மருதானை, தெமட்டகொடை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய 09 பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் முடக்கப்பட்டது.
இந்த பகுதிகளிலேயே கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவு இனங் காணப்பட்டு வந்தமையினை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அத்துடன் குறித்த முடக்கத்தினால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவேதான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் சுகாதார நடைமுறைகளை, கட்டாயமாக பின்பற்றுமாறு வலியுறுத்தி, பெரும்பாலான பகுதிகளை தொற்று நீக்கி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அதனடிப்படையிலேயே மாளிகாவத்தை என்.எச்.எஸ்.வீட்டுத் திட்டமும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.