web log free
January 11, 2025

டெஸ்ட் தொடர் தென் ஆபிரிக்கா வசமானது


இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 10 விக்கெட்டுகளால் வெற்றிகொண்ட தென் ஆபிரிக்க அணி, தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

ஜொஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலளித்தாடிய தென் ஆபிரிக்கா 302 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி 145 ஓட்டங்களால் பின்தங்கிய இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸிலும் தடுமாற்றமான நிலையை எதிர்நோக்கியது. என்றாலும் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் அபாரமான ஆட்டம் அணிக்கு ஆறுதல் கொடுத்தது.

4 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களுடன் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 10 ஆவது டெஸ்ட் சதத்தை அடைந்தார். 128 பந்துகளை சந்தித்த அவர் 19 பௌண்டரிகளுடன் 103 ஓட்டங்களைக் குவித்தார்.

நிரோஸன் திக்வெல்ல 36 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 16 ஓட்டங்களையும் பெற, இலங்கை அணி மேலும் 61 ஓட்டங்களை பெற்றதுடன் கைவசமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளையும், லுதோ சிபாமளா 3 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோட்ரிஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 211 ஓட்டங்களுடன் முடிவுக்குவர, தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு 67 ஓட்டங்களாக நிர்ணயமானது. இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியீட்டியது.

மூன்று நாட்களுடன் முடிவுக்கு வந்த இந்தப் போட்டியில் அய்டன் அக்ரம் 36 ஓட்டங்களையும், டீன் எல்கர் 31 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் டீன் எல்கர் தன்வசப்படுத்திக்கொண்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd