web log free
January 11, 2025

‘ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் பூரணப்படுத்தும் என்று நம்புகின்றோம்’

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக இடம்பெறும் என தாம் எதிர்பார்க்கின்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு விடயத்தில் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டைக் கையாளும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலங்கையிலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் நிதி மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து இரு தரப்புக் கலந்துரையாடல்களை மேற்கொள்வதே விஜயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகளை மேற்படுத்தல், சக்தி மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்தியாவின் குறுகிய மற்றும் மத்திய கால ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து உற்பத்தி நடவடிக்கைகளுக்கான விசேட மையங்கள் உட்பட இந்திய தொழில் முனைவோர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வழிகாட்டல்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு, இந்திய வழிகாட்டல்களை வழங்க ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடல் பாதுகாப்பு குறித்து இந்தியாவும் இலங்கையும் பல்வேறு விடயங்களில் இணங்கியுள்ளதாகவும், மீன்பிடித்துறை சார் விடயங்களில் கலந்துரையாடல்கள் தொடரும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை- இந்திய இரு தரப்பு இராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக்கொள்வதற்கான அடுத்த கட்டக் கலந்துரையாடல்களுக்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd