புதிய சுகாதார வழிமுறைகளின் கீழ் பாடசாலை விளையாட்டு போட்டிகளை ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டலின் பிரகாரம், படிப்படியாக பாடசாலை விளையாட்டு போட்டிகளை ஆரம்பிக்கின்றமை குறித்து அவதானம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொவிட் – 19 தொற்று காரணமாக நிறுத்தப்பட்டுள்ள பாடசாலை விளையாட்டு போட்டிகளை ஆரம்பிக்கின்றமை தொடர்பில் சுகாதார அமைச்சில் இன்று (06) விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
கொவிட் வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படும் மேல் மாகாணத்தை தவிர, ஏனைய மாகாணங்களில் பாடசாலை விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மாணவர்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விளையாட்டு போட்டிகளில் பங்குப்பற்ற செய்ய வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் குழு விளையாட்டுக்கள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றமை குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதிகளவிலானோரின் பங்குப்பற்றுதல் இன்றி, போட்டிகளை நடத்துவது சிறந்தது என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.