ஐ.எஸ்.ஐ.எஸ் இற்குப் பொருள் உதவி வழங்கி, சதி செய்தமை உள்ளிட்ட பயங்கரவாதக் குற்றங்களுக்காக, இலங்கைப் பிரஜைகள் மூவருக்கு எதிராக, அமெரிக்க நீதித் திணைக்களம், குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது என, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த முறைபாட்டுக்கு அமைய, 'இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ்' என்று தம்மைத் தாமே அழைத்துக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் குழுவொன்றின் அங்கமாக, இந்தப் பிரதிவாதிகள் இருந்துள்ளனர் என, ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பிரஜைகள் ஐவர் உட்பட, 268 பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு, இந்தக் குழு பொறுப்பாகும்.
ஏப்ரல் 21 தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர், இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், இலங்கை சட்ட அமுலாக்கத் துறையினருக்கு, அமெரிக்கா விசாரணை உதவிகளை வழங்கியது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,
குற்றமிழைத்தவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்தும் உதவி வருகிறது. வழக்கை நெறிப்படுத்தும் இலங்கை வழக்குத் தொடுநர்களுக்கு, அமெரிக்க நீதித் திணைக்களம் இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்களை வழங்கி வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றங்களுக்கு மேற்படி நபர்களையும் அவர்களது சகாக்களையும் பொறுப்புடையவர்கள் ஆக்குவதற்கான இலங்கையின் முயற்சிகளை, அமெரிக்கா முழுமையாக ஆதரிக்கின்றது. இலங்கையுடனான நெருங்கிய ஒத்துழைப்பையும் இந்தப் பயங்கரவாதிகளை நீதிக்கு முன் நிறுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் அமெரிக்க பாராட்டுகிறது என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.