மிகமுக்கியமான விடயங்களை, மிகச் சரியாக முன்னெடுக்க முடியாமல், அந்த விடயங்கள் எல்லாம் 'பெயில்' சித்தியடையத் தவறிய அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தமுடியாமல் திணறுகின்றது என, ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டி உள்ளது.
பாராளுமன்றத்துக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமை மோசமடைந்து வருகின்றது. நிலைமையைப் பார்க்கும் போது, 224 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது' என்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், அரசாங்கத்தால் நாட்டு மக்களையும் கொரோனா வைரஸிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை எம்.பிக்களையும் காப்பாற்ற முடியவில்லை. அதாவது, பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் 'பெயில்'; பாராளுமன்றத்துக்கு வெளியேயும் 'பெயில்' என்றார்.
ஒவ்வொரு முக்கியமான விடயங்களிலும் சித்தியடையத் தவறிய அரசாங்கமே, இந்த அரசாங்கமாகும் என்பதைச் சொல்லிக்கொள்வதில் அச்சமடையவில்லை எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் பொருளாதார ரீதியிலும் 'பெயில்', நிர்வாகத்திலும் 'பெயில்', கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டிலும் 'பெயில்' என்றார்.