உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்து அதற்கெதிராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அவர் தனது போராட்டத்தை இன்றைய தினம் காலை பௌத்த சமய வழிபாடுகளுக்கு மத்தியில் ஆரம்பித்தார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புக்களைத் தடைசெய்வதற்கான பரிந்துரைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஆத்திரமடைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பௌத்த மத பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் தலைமைத் தேரர்களை சந்தித்து முறையிட்டிருந்தார்.
இந்த அறிக்கைக்கு எதிராக பௌத்த தலைமைத்துவங்கள் ஒன்றுதிரள வேண்டும் என்றும் அவர் அழைப்பினை விடுத்திருந்தார். இந்த எதிர்பினை மற்றுமொரு கட்டத்திற்கு கொண்டுசெல்லும் முகமாக அவர் இன்றைய சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஞானசார தேரரின் இந்தப் போராட்டத்திற்குப் பெருந்திரளான பௌத்த தேரர்களும் பலம் சேர்க்கும் நோக்கில் இணைந்து கொண்டுள்ளனர்.