எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு நேற்று மாலை வருகை தந்தனர்.
மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் டில்வின் சில்வா ஆகியவர்களே இவ்வாறு வருகை தந்தனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மக்கள் விடுதலை முன்னணியுடன் இன்று இடம்பெற உள்ள சந்திப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னதாக தெரிவித்திருந்தார்.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்றஅனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வது தமது கடமையும்பொறுப்புமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் வேண்டுகோளின் பிரகாரம் இச்சந்திப்பு இடம்பெறுவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்கள் வேண்டுகோள் விடுத்தால், நாட்டிற்கு நன்மைபயக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுக்கும், ஜே.வி.பியினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிததுள்ள ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, அரசியமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை பொதுமக்கள் கருத்துக் கணிப்பின் ஊடாக நிறைவேற்றுவதற்கு இடமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்திருந்த எதிர்க்கட்சித் தரப்பினர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதில் கொள்கை அடிப்படையில் இணங்கியிருந்ததாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாடாளுமன்ற தேர்தல் முறைமை மற்றும், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பன குறித்து கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தரப்பினர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.