web log free
January 11, 2025

கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன்

மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று ஹட்டனில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், செயலாளர் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன், மகளிர் முன்னணியின் உப தலைவி திருமதி சுவர்ணலதா இளங்கோவன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் மலையக மகளிர் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் உரையாற்றுகையில், மலையக மக்கள் முன்னணி அண்மைக்காலமாக பல துன்பங்களை சந்தித்து வருகின்றது. நான்கு பக்கங்களிலும் நெருக்கடிகள். குறிப்பாக, அனுசா சந்திரசேகரனின் விலகல் மற்றது அரவிந்தகுமாரின் செயற்பாடு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தம் அத்துடன் எதிர்க் கட்சியில் இருக்க வேண்டிய நிலை என்பன முக்கியமானவை. இவற்றுக்கு மத்தியிலேயே பொதுச் செயலாளராக பேராசிரியர் விஜேசந்திரன் செயற்படுகின்றார். இந்நிலையில், அங்கத்தவர்களின் ஒற்றுமையே இதிலிருந்து மீள ஒரே வழியாகும். 2025 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை ஆளக்கூடிய வகையில் மலையக மக்கள் முன்னணி உருவாகும்.

கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும். ஏனெனில், மலைக மக்களின் பிரச்சினை இதன்போது அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தப்படும். தற்போது கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் கைச்சாத்திடுகின்றன. எனவே மூன்றாவது தரப்பாக அரசாங்கத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினையை தீர்க்க சிங்களவர்களின் ஒத்துழைப்பும் அவசியம். அதேபோல் பெண்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் ஆண்களின் அனுசரனை அவசியம். தற்போதைய நிலையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெரும்பான்மையினர் தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தற்போது வடமாகாண காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு மாற்றப்படுகின்றன. ஆகவே, மக்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்றார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd