web log free
January 11, 2025

எதிர்க்கட்சியின் அபத்தமான குற்றச்சாட்டுகளால் மக்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க முடியாது: ஜனாதிபதி

எதிர்க்கட்சி என்ற வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும். அவை உண்மைத் தகவல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இருப்பினும், அபத்தமான குற்றச்சாட்டுகளை கூறி மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் தெரிவித்த ஒரு கருத்து ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இது தேசிய பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் கருத்து. எனவே, இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்தியது. அக் கருத்தை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர், "நான் மறந்துவிட்டேன், மயக்கம் அடைந்தேன், எனக்குத் தெரியாது என்று பதிலளித்துள்ளார்.  இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி மக்களை ஒருபோதும் ஏமாற்றக்கூடாது.” என்று ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார்.

நேற்று(13) காலி மாவட்டத்தின் மாதம்பாகம பிரதேச செயலக பிரிவில் உள்ள கலகொட கிழக்கு கிராம அதிகாரி பிரிவில் உள்ள ஜனபத கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற 14 வது "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும், உரையாற்றுகையில், மனித உரிமைகள் பேரவை எங்களுக்கு எதிராக கொண்டு வந்த முன்மொழிவுக்கு கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அந்த நிலைப்பாட்டை நிராகரித்து, தற்போதைய அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகியது. எம்.சி.சி ஒப்பந்தம் உட்பட நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்களில் இருந்து முறையாக விலகி மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக்கு பதிலாக எதிர்ப்பு தெரிவிக்க தனி இடம் வழங்கப்பட்டது. தேசியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு விவசாய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் எமது விவசாயிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை வெளிநாட்டு விவசாயிகளை வளப்படுத்திய பொருளாதாரக் கொள்கை மாற்றப்பட்டு, நாட்டில் பயிரிடக்கூடியவற்றை பயிரிடுவதன் மூலம் எமது விவசாயிகளை வளப்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மனித உரிமைகள் பேரவை அரசாங்கத்திற்கு எதிரான அதிக எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுகளுடன் ஒரு அறிக்கையை சமர்ப்பிப்பதை தான் கண்டது இதுவே முதல் முறை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd