தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் திட்டத்திற்கமைவாக இலங்கையின் சகல மாவட்டங்களிலும் எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்படவுள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான எழுத்தாளர் சங்கம் உருவாக்குவது தொடர்பான கூட்டம் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரனினதும், மாவட்ட கலாசார திணைக்களத்தினதும் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு. கே. கருணாகரன் தலைமையில் நேற்று (17) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு அமைய மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தலா 03 பேரை கொண்டதாக மாவட்ட எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்படவேண்டும். அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தலா 03 பேர் வீதம் மொத்தமாக 42 நபர்களை ஒவ்வொரு பிரதேச செயலாளர்களினாலும் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
இந் நிகழ்வில் எழுத்தாளர் சங்க உறுப்பினர் தெரிவுகள் நடைபெற்றன. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்க நிறைவேற்றுத் தலைவராக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் செயற்படுவதுடன், தலைவராக கலாநிதி. முருகு தயாநிதி, உப தலைவர்களாக இரா. தவராஜா, கே. நௌஷாத், செயலாளராக வீ. மைக்கல் கொலின், உப செயலாளராக திருமதி. சுதாகரி மணிவண்ணன், பொருளாளராக கதிரவன். ரீ. இன்பராசா மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக திருமதி. ரூபி வலன்டினா பிரான்சிஸ், ஜீனைதா ஷெரீப், ஏ. சீ. அப்துல் ரஹீமான், கே. அருளம்பலம், கலாபூஷணம் கே. தணிகாசலம், ஜிப்ரி ஹசன் ஆகியோரும் சபையோரினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
எழுத்தாளர்களின் செயற்றிறனை விருத்தி செய்தல், துறைசார் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்தல், சிறந்த ஆக்கங்களை உருவாக்குதல், எழுத்தாளர்களுக்கான உதவி, வழிகாட்டல், ஆலோசனை என்பனவற்றை ஒரு கட்டமைப்பு ரீதியான செயற்பாட்டிற்கூடாக வழங்குவதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட கலாசார திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.சீ ஜெய்னுலாப்தீன், மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. வை. தனுஷியா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.