web log free
January 11, 2025

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கு மத்தியில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நீதிகோரிய எழுச்சிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச நீதிகோரி முன்னெடுக்கப்பட்டுவந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தின் 17வது நாளான இன்று அதனை நிறைவுறுத்தும் வகையிலும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிகோரிய வகையிலும் இந்த போராட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது.

இந்த போராட்டமானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் குறித்த போராட்டத்திற்கு எதிராகவும் அதில் கலந்துகொண்ட சிலருக்கு எதிராகவும் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இத்தடையுத்தரவு காரணமாக போராட்ட இடம் மாற்றப்பட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டது. சித்தாண்டி,மாவடிவேம்பு மருங்ககையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஒன்றுகூடியவர்கள் அங்கிருந்து பேரணியாக சித்தாண்டி சந்திப்பிள்ளையார் ஆலயம் வரையில் பேரணியாக வந்தனர்.

தமிழர் தாயகப்பகுதியை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தவேண்டும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் ஊடாக தீர்வினை வழங்கவேண்டும், ஐ.நாவில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்தினை நிகாரிப்போம், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், மேய்ச்சல் தரை நிலத்தினை மீட்டுத்தாருங்கள், எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் உட்பட பல்வேறு கோசங்கள் இந்த பேரணியின்போது எழுப்பப்பட்டன.

இந்த பேரணி ஆரம்பமான நிலையில் அங்குவந்த ஏறாவூர் பொலிஸார் தடையுத்தரவு உள்ளதாக கூறி போராட்டத்தினை நிறுத்துமாறு கோரிய நிலையிலும், அவற்றினை கருத்தில்கொள்ளாமல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போலியான தடையுத்தரவினை காட்டி பேரணியை தடுக்கமுனைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் இறுதியில் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு சென்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தினர் அங்கு சமாதியில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd