web log free
January 11, 2025

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கும் முதல் கட்ட நிகழ்வு நேற்று (19) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக  டேபா மண்டபத்தில்  இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி நடவடிக்கைக்கு அமைவாக இந்த காணி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமலராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமத்தினை வழங்கிவைத்தார்.

குறித்த இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன் கலந்து சிறப்பித்திருந்ததுடன், குறித்த நிகழ்வில் முதற்கட்டமாக 33 தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் 2019ஆம்ஆண்டு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக காணி சீர் திருத்த ஆணைக்குழுவினால் காணி கச்சேரி செய்யப்பட்டு 33 ஊடகவியலாளர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டது.

இருந்தபோதிலும், காணியை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தடங்கல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டபோது காணி விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகனை அமைச்சர் முன்னெடுத்திருந்தார்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd