முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
2008-2009ஆம் ஆண்டுகளில் கொழும்பின் தெஹிவளை கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உள்ளிட்டவர்களை கைது செய்தது.
இந்த வழக்கில் கடற்படையின் அதிகாரிகளான 12 சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டிருக்கின்றனர்.
முன்னதாக, தம்மை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்வதற்கு தடைவிதிக்க கோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவானது கடந்த 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது, அட்மிரல் கரன்னகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படமாட்டார் என்று என்று உறுதியளிக்க முடியாது என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உச்ச நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
இதேவேளை, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட கடற்படை வீரர்கள் சிலருக்கு எதிராக குற்றப்பத்திரம் ஒன்றை உயர் நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் நேற்று அறிவித்தது.
கொலை, அதற்கு உதவி செய்தமை, கொலை செய்வதற்காக திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது. இதன்போது, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைதுசெய்யவதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ இடைக்கால தடை விதிப்பதாக நீதிமன்றதம் அறிவித்துள்ளது.
எனினும், எதிர்வரும் 11ஆம் திகதி காலை 09 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலமளிக்குமாறு அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.