காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (20) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்.
குறித்த கலந்து கொண்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளில் 10 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அவர்கள் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு குறித்த விவரங்களை கொண்டு தீர்வு வழங்க கூடிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இரு அணிகளாக செயற்படுகின்றார்கள். ஒரு தரப்பு இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க கூடாது எனவும், இன்னொரு தரப்பு இதற்குரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள். எதிர்வரும் ஒன்றரை மாத காலத்திற்குள் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினை தொடர்பில் தீர்வினை தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தோடு, குறித்த கலந்துரையாடலின் போது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தங்களது உறவுகள் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எனவும் பலருக்குஎன்ன நடந்தது என தெரியாது எனவும் தெரிவித்தனர்.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரச்சினை தொடர்பில் இதை தீராத பிரச்சினையாக இதை வைத்திருக்க விரும்பவில்லை எனவும், சில அரசியல் தலையீடுகள் இந்த விடயத்தை தீராத பிரச்சினையாக வைத்து அரசியல் செய்ய முனைகின்றார்கள். எனினும், நான் இதற்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாகவே இன்றைய தினம் முதற்கட்டமாக உங்களை சந்தித்துள்ளேன். எதிர்வரும் காலங்களில் உங்களை ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்று உங்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தர முடியும் என எதிர்பார்க்கின்றேன் எனத் தெரிவித்தார்.