கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக வெளியாகிவரும் தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது என்று ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை மீண்டும் மீட்பதாக தமிழகத் தரப்பினரால் வெளியிடப்பட்டு வரும் கருத்துகளுக்கும் அமைச்சர் இன்று பதிலளித்தார்.
இது கறித்து மேலும் தெரியவருவதாவது,
சியரட்ட என்கிற சிங்கள ஊடகத்தின் ஊடகவியலாளரான சுஜீவ கமகே என்பவர், தாம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டதாக வைத்தியசாலையிலிருந்து வெளியான கையுடன் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த சம்பவம் ஒரு நாடகமே என்றும், குறித்த ஊடகவியலாளர் தனது உடம்பை தாமே காயப்படுத்திக்கொண்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ராஜித சேனாரத்னவினால் தேர்தல் காலத்தில் கூறப்பட்ட முதலைக் கதையின் தொடர்ச்சியே இது என்று கூறினார்.
குறித்த ஊடகவியலாளர் தாமே பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். முதலைகள் குளம் பற்றிய கதையின் இரண்டாவது பகுதியாகவே இதனைப் பார்க்கின்றோம். வெள்ளை வானில் கடத்தியவர்களே இன்று வாக்குமூலம் அளித்திருப்பது போல இந்த ஊடகவியலாளரும் பொலிஸாரிடத்தில் உண்மையை கூறியுள்ளார். இன்னும் சில தினங்களில் மேலும் பல விடயங்களை இந்த சம்பவம் குறித்து எதிர்பார்க்கலாம் என்றார்.
இதேவேளை, கச்சத்தீவை மீட்கப்போவதாக தமிழக அரசியல்வாதிகளால் கூறப்படும் விடயம் குறித்தும் அமைச்சர் இதன்போது கருத்து வெளியிட்டார்.
கச்சத்தீவு விவகாரம் இன்று நேற்று உருவானதல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல அரசியல்வாதிகள் அரசியல் தேவைக்காக தேர்தல்கள் நெருங்குகையில் மக்களுக்கு அதனை தருவோம், இதனைத் தருவோம் என்கின்றார்கள். எனினும், இந்தியா எமது அயல்நாடு. மிகவும் நெருக்கமான நட்புநாடு. ஆகவே, கச்சத்தீவு விவகாரத்தில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை கூறுகின்றேன்.
இதேவேளை 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறையை இரத்து செய்யாமலிருக்க இந்தியாவிடத்திலிருந்து எந்த அழுத்தங்களும் இலங்கைக்கு விடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
யாரிடத்திலிருந்தும் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டோம். இறைான்மை கொண்ட நாடாக நாங்கள் சுதந்திரமாகவே செயற்படுகின்றோம். 13ஆவது திருத்தம் குறித்து இந்தியாவுடன் நட்புரீதியாக எமக்கு பேச்சு நடத்தமுடியும் என்றும் தெரிவித்தார்.