web log free
January 11, 2025

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீது இன்று விவாதமும் வாக்கெடுப்பும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில்  முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணையானது இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பெரும்பாலும், இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்றைய தினமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த இந்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளினால் ஏற்கனவே ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விவாதத்தின் இடைநடுவே, சில நாடுகள் தலையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை வரை பிற்போடப்படலாம் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

47 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், குறித்த பிரேரணை தொடர்பில், தமது நட்பு நாடுகளுக்கு அறிவுறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக இந்தியா இது குறித்து இதுவரையில்  தமது நிலைப்பாட்டை அறிவிக்காத போதிலும், பெரும்பாலும் வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே, இலங்கை தொடர்பிலான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் 193 நாடுகள் மத்தியில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் அதிகாரத்தைக் கொண்ட நாடுகள் 47 இடம்பெற்றுள்ளன. இவற்றில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தற்பொழுது தெரிவித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd