கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அண்மையில் சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இயந்திரம் குடை சாய்ந்து அதன் சாரதி ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (24.03.2021) காலை சுமார் 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் நிர்மானிக்கப்பட்டு வரும் அதிசக்தி வாய்ந்த மின் இணைப்பு பணிக்காக சென்று கொண்டிருக்கும் போது குறித்த மண் அகற்றும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடுப்பு கட்டை செயலிழந்துள்ளது.
அதனால் குறித்த இயந்திரம் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போது சாரதி பாய்ந்துள்ளதாகவும் அவர் பாய்ந்த பக்கத்திலேயே இயந்திரம் குடை சாய்ந்ததில் அதில் அகப்பட்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் பதுளை ஹாலிஎல உடுவர பகுதியை சேர்ந்த யாப்பா முதியன்ஸலாகே சந்தருவான் மதுசங்க யாப்பா (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் கித்துல்கல தெலிகம வைத்தியசாலையில் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.