ஜெனீவா சமரில் கடந்த முறை இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகள் இன்று பின்வாங்கியிருப்பது ஆட்சியாளர்களின் பலவீனத்தையே எடுத்துக்காட்டியிருப்பதாக ஜே.வி.பியின் (மக்கள் விடுதலை முன்னணி) தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணையாளராக வெளிவிவகார இராஜாங்க அமைச்சரின் தந்தை நியமிக்கப்பட்ட நிலையில், இலங்கையின் சுயாதீன பொறிமுறை மீது சர்வதேசம் எப்படி நம்பிக்கை கொள்ளும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் பற்றிய ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்கு எதிராக ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
அவர் கூறுகையில், ஜெனீவா தீர்மானம் என்பது இலங்கை நாட்டிற்கு எதிரான தீர்மானமல்ல. அரசாங்கத்தினால் ஜனநாயகம், மனித உரிமை போன்றவற்றை பாதுகாப்பு செய்வதற்கான யோசனைகளே அவையாகும். ஐ.நா அமைப்பு, உலகில் பக்கசார்பற்று செயற்படுவதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். பலமான அரசியல், பொருளாதாரம், யுத்தம் போன்ற நிகழ்ச்சி நிரல்களும் அதில் உள்ளன. 47 உறுப்பு நாடுகளும் அமெரிக்காவின் ஆளுகைக்கு இருக்கின்றன எனக் கூறினால் அது தவறாகும். மனித உரிமை பேரவையில் நாங்கள் வெற்றிபெற்றிருந்தோம். எமது யோசனையின் பின் பாலஸ்தீனம் மீதான தீர்மானத்தில் 32 வாக்குகளைப் பெற்று பாலஸ்தீனம் வெற்றிபெற்றது. வரலாற்றில் இம்முறைதான் 11 வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம். அமைதியாக இம்முறை இருந்த நாடுகள் கடந்தமுறை எமக்கு சார்பாக வாக்களித்திருந்த நாடுகளாகும். அந்த வகையில் அரசாங்கத்தின் மனித குலத்திற்கெதிரான செயற்பாடுகள் காரணமாகவே இந்நிலைமையை எதிர்கெள்ள காரணமாக அமைந்துள்ளது. நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யும்படி ஆணைக்குழு ஒன்றினால் பரிந்துரைக்கப்படுகின்ற நிலையில், உள்நாட்டில் சுயாதீனம் இருப்பதாக எப்படி கூறமுடியும்?
20ஆவது திருத்தம் ஊடாக நீதியரசர் முதல் நீதிபதி வரை நியமிக்கப்படும் முறையை நீக்கி அரச தலைவரின் நிர்வாகத்தில் கொண்டுவந்ததுவும் நீதித்துறையில் சுயாதீனத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளதா? சுயாதீன ஆணைக்குழுக்கள் இன்று அரச தலைவரின் நியமனங்களாக உள்வாங்கப்பட்டுள்ளன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலசூரிய உள்ளார். இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சரின் தந்தையே அவர். கடந்த காலத்தில் அரசாங்கம் இனவாதத்தையே விதித்தது. இது நீதியான செயற்பாடா? ஆகவே அரசாங்கம் அதிகாரத்திற்காக நீதிமன்றம், மனித உரிமைகளை விழுங்கியிருப்பதால்தான் நாடு என்கிற வகையில் ஜெனீவாவில் நட்டஈடு செலுத்துகின்றோம். இந்த தீர்மானத்தின் பின் தேசப்பற்று போன்ற போலி நாடகமும் அரங்கேறலாம். அயல்நாட்டினதும் உதவியைப் பெற முடியாத ஆட்சியாளர்களின் முடியாத்தன்மையே இன்று புலப்பட்டுள்ளது.