web log free
October 18, 2024

மன்னார் எலும்புகள் 1400- 1650 ஆண்டுகளுக்குரியவை

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் உடல்கூற்று கார்பன் பரிசோதனை அறிக்கையானது வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், அந்த மனித எலும்புகூடுகள், கி.பி.1400 முதல் கி.பி. 1650 ஆண்டுகளுக்குரியவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்துக்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

குறித்த பரிசோதனை அறிக்கை 14 நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போது சட்ட ரீதியாக கடந்த நாட்களில் கிடைக்க பெறாத நிலையில் நேற்றை தினம் குறித்த அறிக்கையானது சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு கிடைக்கப் பெற்றது.

அதே நேரத்தில் குறித்த அறிக்கை தொடர்பான எந்த விபரங்களையும் தன்னால் வழங்க முடியாது எனவும் அவ் அறிக்கை தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள் குறித்த அறிக்கையினை மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுகொள்ள முடியும் என நேற்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

குறித்த மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கி.பி.1400 முதல் கி.பி. 1650 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கு உரியவை என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடாவைத் தளமாகக் கொண்ட பீட்டா நிறுவனமே இந்த கார்பன் பரிசோதனையை மேற்கொண்டிருந்தது.