மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணி பிணக்குகளை தீர்ப்பது தொடர்பான விசேட வழிகாட்டுதல் செயலமர்வு காணி ஆணையாளர் நாயகம் கீர்த்தி கமகே தலைமையில் நேற்று (25) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் விசேட வழிகாட்டுதல் செயலமர்வில் மாவட்டத்தில் உள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பாகவும், காணி பிணக்குகளை தீர்ப்பது தொடர்பாகவும் விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் "சுபீட்சத்தின் நோக்கு" திட்டத்திற்கமைவாக அரசாங்கத்தினால் சகல மக்களுக்கும் இன, மத பேதமின்றி அவர்களுக்கான காணி தீர்வினை பெற்றுக்கொடுப்பதே இச் செயலமர்வின் நோக்கமாக அமைந்தது.
காணி விடயங்களை கையாளும் போது அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களுடன் மகிழ்ச்சிகரமான முறையில் செயற்பட்டு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதோடு, சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம் எடுத்தல், அரச அதிகாரிகள் நேர்மையாக அரசியல் அழுத்தமின்றி செயற்படல் தொடர்பாகவும், அரசாங்கத்தின் திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இங்கு கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் எஸ். ரவிராஜனின் வேண்டுகோளின் பேரில் மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கை முதன்முதலில் கிழக்கு மாகாணத்தில் பணிபுரிவோருக்கு அரச காணி முகாமைத்துவ தமிழ் கைநூல் வழங்கிவைக்கப்பட்டது.
இச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட காணி பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன், மக்கள் காணி ஆணைக்குழுவின் ஆணையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பிரியங்கர கொஸ்டா, Law and Society Trust அமைப்பின் அலுவலர் பீ. எம். சேனாரத்ன, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.