"ஜெனீவா அழுத்தத்திற்கு நாம் அச்சமின்றி முகம்கொடுப்போம். அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும். நாங்கள் ஒரு சுதந்திர நாடு. இந்து சமுத்திர அதிகாரப் போராட்டத்திற்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். நேற்று (27) மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தற பிரதேச செயலகப் பிரிவில் கிரிவெல்கெலே வடக்கு கிராம சேவகர் பிரிவில் தேரங்கல மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” 16வது நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
நீண்ட காலமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரியாக அடையாளம் கண்டு தீர்ப்பதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அடிப்படை அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாடாகும். இது அரசாங்கத்தைப் போன்றே அதிகாரிகளுடையவும் பொறுப்பு. நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பயனுள்ள முறையில் வலுப்படுத்தும் அதேநேரம் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அன்று கொழும்பு நகரம் பசுமை நகரமாக உருவாக்கப்பட்டது. 2030 அளவில், 70% சக்தி வளத் தேவைகள் மீள்பிறப்பாக்க மூலங்களிலிருந்து உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 7000 க்கும் மேற்பட்ட சூரிய சக்தி அமைப்புகளிலிருந்து பிரதான மின் கட்டத்திற்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரசாயன உரங்களின் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் 25% குறைக்கப்படுகிறது. இவை அனைத்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்கள்.
இந்த முன்னேற்றங்களை சகித்துக்கொள்ளமுடியாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் மாஃபியா குழுக்களும் பொய்களை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். என்ன செய்யப்படுகிறது என்பதை சரியாக பார்க்காமல் தவறான கருத்துக்களினால் ஏமாற்றமடைந்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட சேதம் மீண்டும் நிகழலாம். அப்படி நடந்தால் அந்த சேதத்தை சரிசெய்வது எளிதானதல்ல என்றும் ஜனாதிபதி கூறினார்.
கடந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதன் விளைவாகும். ஆதாரமற்ற குற்றச்சாட்டில் படைவீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை அளிக்கும் அளவுக்கு நாட்டின் இறையாண்மை சிதைந்தது. பழக்கப்பட்ட யானைகள் தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்தி கலாச்சாரம், மதம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எம்.சி.சி ஒப்பந்தம் மற்றும் கிழக்கு முனையம் போன்ற ஒப்பந்தங்களுக்கு வந்தபோது நாடு பெரும் நெருக்கடியில் மூழ்கியது. அவற்றுக்கு இன்று தீர்வுகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அனைத்து பிரச்சினைகளையும் உருவாக்கி அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், கடந்த அரசாங்கத்தின் பிரபலமானவர்கள் ஒருபோதும் ஆட்சியில் இல்லாதது போல் இன்று பேசுகிறார்கள், நடந்துகொள்கிறார்கள் என்று ஜனாதிபதி அவர்கள் கூறினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி பேசுவது தனது கொள்கை அல்ல என்றாலும், உண்மையை தெளிவுபடுத்துவதற்காக அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.