web log free
January 11, 2025

இந்திய சிறைகளிலுள்ள இலங்கை மீனவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்: செல்வம் எம்.பி

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட   இந்திய மீனவர்கள் இலங்கை அரசினால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது போல், இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மீனவர்களையும் உடன் விடுதலை செய்ய இலங்கை மற்றும் இந்திய அரசுகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று  (29) க இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் இரண்டு தினங்களில் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களின் விடுதலைக்காக இந்திய தூதரகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த மீனவர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்தமை பாராட்டத்தக்கது.

 ஆனால் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி குற்றச்சாட்டில் பிடி பட்டு இந்திய சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.பெரும்பான்மை இன மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுதலை செய்வதற்காக இலங்கை அரசாங்கமும், இந்தியாவில் இருக்கின்ற இலங்கை தூதரகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவர்களை விடுதலை செய்கின்றனர்.

ஆனால், தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களையும், அவர்களின் மீன் பிடி உடமைகளையும் இன்று வரை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.இலங்கை அரசாங்கம் தமிழர்களின் விடையம் என்ற வகையில் அசமந்த போக்கை கடைப்பிடிக்க கூடாது.

அவர்களும் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் விடுதலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் தொடர்ந்தும் சிறையில் வாட அனுமதிக்கக் கூடாது.எனவே தமிழராக உள்ள மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

இந்தியாவில் இருக்கின்ற இலங்கை தூதரகமும் இலங்கை அரசாங்கமும் தமிழ் மீனவர்களை விடுதலை செய்வதற்கான ஒரு முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

எங்கு பார்த்தாலும் இன ரீதியான ஒடுக்கு முறையை இலங்கை அரசாங்கம் செய்து வருகின்றது. குறிப்பாக எல்லை தாண்டி போகின்ற எமது மீனவர்கள்  இன்றைக்கும் சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.அவர்கள் வேண்டும் என்று எல்லை தாண்டிச் செல்வதில்லை. எனவே, அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை யாரும் செய்யவில்லை. நாங்களும், அமைப்புக்களும் மீனவர்களை விடுதலை செய்ய குரல் கொடுக்கின்றோம்.

ஆனால், அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கரை செலுத்தவில்லை.எனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மீனவர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd