சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 06 இலட்சம் டோஸ்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளது. சீனாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்படும் இந்த தடுப்பூசி பங்குகளை சுகாதார அமைச்சகம் பெற்றுக் கொள்ளும்.
சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக தற்போது இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் என்றும் WHO எனப்படும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னரே, இலங்கையர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன நேற்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச்சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, சீனாவிலுள்ள உயர்கல்வியை தொடர்கின்ற இலங்கை மாணவர்களுக்கு சினோபார்ம் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இலங்கை இதுவரை 1,864,000 ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுள்ளது. அவற்றுள் 1,264,000 டோஸ்கள் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அதேநேரம் உலக சுகாதார அமைப்பு கோவாக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 264,000 தடுப்பூசிகைள வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.