இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதனை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள், நீதிமன்ற பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும். அந்த சாட்சிங்கள் போதாமல் இருக்கின்றபோது. அதனை நாங்கள் கேட்டால் எங்களுக்கு விரும்பத்தகாத பதிலே வந்துசேரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை சரியான வழியில் பயணிக்கவேண்டுமாகயிருந்தால் இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதுவே இலங்கைக்கு நல்லதாகும் எனவும் தெரிவித்தார்..
இன்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதில் வழங்கினார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர், நாங்கள் சர்வதேசத்திடமே இன்று நீதிகோரி நிற்கின்றோம்,சர்வதேசத்தின் அறிக்கைகளை நாங்கள் சாதகமாகவே பாவிக்கின்றோம். இந்த அறிக்கைகளுக்கு எதிராக யாரும் கருத்துகளை தெரிவித்ததாக நான் அறியவில்லை.
இருதரப்பினரும்போர்க்குற்றம் செய்தார்கள் என்று நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்திடமிருந்து எங்களுக்கு நீதியும் ஆனால் நாங்கள் சொல்வதையே அங்கிருந்து சொல்லவேண்டும் என்பதை யாரும் எதிர்பார்க்கமுடியாது. அனைத்து பக்கங்களையும் விசாரணைசெய்து சரியான தீர்மானங்களையே அவர்கள் எடுப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.