web log free
January 11, 2025

நான் முக்கியமல்ல, என்னை ஆட்சிக்கு கொண்டு வந்த கொள்கையே முக்கியமானது: ஜனாதிபதி கோட்டாபய

“கோட்டாபய ராஜபக்ஷ முக்கியமல்ல, என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானதாகுமென்று நான் எப்போதும் கூறி வருகின்றேன். நாம் அதனையே பாதுகாக்க வேண்டும். எதிர்சக்திகள் முன்னெடுத்துவரும் போலிப் பிரச்சாரங்களின் நோக்கம் இந்த கொள்கையை தோல்வியுறச் செய்வதாகும். மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளையே நான் நிறைவேற்றி வருகிறேன்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

தான் அதிகாரத்திற்கு வரும்போது வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதாரம், கொவிட் நோய்த் தொற்றுக்கு மத்தியலும்கூட தேசிய பசுமைப் பொருளாதாரமாக கட்டியெழுப்பப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். தனது பதவிக்காலத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போகுமானால் தன்மீது குற்றம் சுமத்துமாறு ஜனாதிபதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இன்று (03) வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவின் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் கலந்துரையாடல்” 17வது நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

தற்போது பேசுபொருளாக உள்ள விடயம் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி, நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களினதும் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசீலனைக்குட்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொருத்தமானதல்ல என அண்மையில் கண்டறியப்பட்டிருப்பது இந்த பரிசீலனையின் பெறுபேறாகவே ஆகும். பரிசீலனையை தொடர்ச்சியாக மேற்கொண்டு நுகர்வு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தான் அதிகாரத்திற்கு வந்து குறுகிய காலப்பகுதியில் மேற்கொண்டுள்ள பணிகள் பற்றி விளக்கிய ஜனாதிபதி அவர்கள், சுற்றாடலுக்கு பாரிய அழிவை ஏற்படுத்திவந்த செம்பனை அல்லது முள்தேங்காய் பயிர்ச் செய்கையை முழுமையாக தடை செய்துள்ளதாக குறிப்பிட்டார். தேங்காய் எண்ணெய் நுகர்வில் சாதகமான பெறுபேறுகளை அறிந்து பாம் ஒயில் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது. நாட்டினுள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதற்கான வழிகளும் மூடப்பட்டுள்ளன. சுற்றி வளைப்புகளின் மூலம் போதைப்பொருள் மற்றும் நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை கைப்பற்றுவதற்கு முடிந்துள்ளது.

தான் அதிகாரத்திற்கு வரும்போது வெள்ளைவேன், முதலைகள், சுறா மீன்கள் பற்றி எல்லாம் போலிப் பிரச்சாரங்களை சமூகமயப்படுத்திய குழுக்கள் தமது போலிப் பிரச்சாரங்கள் வெற்றியளிக்காத நிலையில் தற்போது சுற்றாடல் பற்றி போலியான மற்றும் மோசமான கருத்துக்களை சமூகமயப்படுத்தி வருகின்றனர். நிறுவனமயப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் அரசாங்கத்திற்கும் தனக்கும் எதிராக முன்னெடுத்துவரும் போலிப் பிரச்சாரங்களை தோல்வியுறச் செய்து தன்னை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்த கொள்கையை பாதுகாக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வட மாகாண ஆளுநர் திருமதி. பீ.எஸ்.எம். சார்ல்ஸ், வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், மாவட்ட மக்கள் பிரதிநிதிகள்,  ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்பு பிரதானிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd