உயிர்த்த ஞாயிறு தினமான இன்று, நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு பணிகளில் முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளடங்களாக சுமார் 12 ஆயிரம் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது, 2542 இராணுவத்தினரும், 146 விசேட அதிரடிப்படையினரும், 9356 பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
மேலும், மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு சேவை மற்றும் பொலிஸ் நடமாடும் சேவை ஆகியனவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டுஇ ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பினை பிரதிநிதிப்படுத்திய இலங்கையைச் சேர்ந்த பயங்கரவாதிகளினால் நாட்டிலுள்ள பல்வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதில் 259 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல இன்னும் தங்களது உறவுகளை இழந்த நிலையில் துன்பத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாத்தியடைய வேண்டி விசேட ஆராதனைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று நடைபெற்றுவருகின்றன.
இதேவேளை குறித்த தாக்குதலுக்கு காரணமான சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, தொடர் விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்ற போதிலும் தாக்குதல் நடத்தியமைக்கான காரணங்கள் குறித்து சரியான முடிவுகளை அரசாங்கம் இதுவரை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில்,
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
2019 இல் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களை நினைவு கூருதலுடன் இவ்வாண்டு உயிர்த்த ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு பிரிவினர் இது தொடர்பில் மிகுந்த அவதானிப்புடன் இருப்பதோடு , இலங்கை பொலிஸாருடன் இணைந்து முப்படையினரும் சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்புச்சபை அதிகாரிகள் மற்றும் முப்படையினருக்கு விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் மிகுந்த அவதானத்துடன் கடமையில் ஈடுபடுமாறும் , பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் ஸ்திரப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படைவாதம் , வன்முறைகள் அல்லது பயங்கரவாதம் என்பவை தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் அவதானத்துடன் இருக்குமாறும் , இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் தெரியவரும் பட்சத்தில் அவை தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிக்குமாறும் சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.
இதே வேளை வழிபாடுகளில் ஈடுபடும் போது சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.