web log free
January 11, 2025

காடழிப்பை தடுக்க சர்வதேசத்தின் உதவியை நாடும் ரணில்

இலங்கை  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் காடழிப்புக்களை தடுக்க ஐக்கிய தேசிய கட்சி சர்வதேசத்தின் உதவியை நாடவுள்ளதாக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

நுகேகொடையில் நேற்றைய தினம்(04) நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,  சிங்கராஜ வனப்பகுதியில் நீர்தேக்கமொன்றை உருவாக்கி அதனூடாக அம்பாந்தோட்டை பிரதேசத்துக்கு நீர் வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இது வனப்பாதுகாப்பு சட்டத்துக்கு முரணானது.  தற்போது நடைமுறையில் உள்ள வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு அமைய சிங்கராஜ வனத்தில் ஒரு மரத்தை கூட வெட்டுவது கூட  சட்டவிரோத செயற்பாடாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து உலக நாடுகள் துரிதகர அபிவிருத்தி செயற்திட்டங்களை சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுத்துள்ளன. ஆனால், அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக செயற்படுகிறது. சிங்கராஜ வனம் இலங்கையின் பிரதான மழைக்காடாக காணப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்க  முன்னாள் அரச தலைவர் அமரர் ஜே. ஆர் ஜயவர்தன காலத்தில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சிங்கராஜ வனத்தின் நிலப்பகுதிகள் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சட்டவிரோத செயற்பாட்டை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கராஜ வனத்தை அழித்துக் கொண்டிருக்கும் அதேவேளை கொழும்பில்  மரக்கன்றுகளை நாட்டுவது பயனற்றது . சிங்கராஜ வனம் பாதிக்கப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். சிங்கராஜ வனத்தை  பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் கட்சி பேதங்களை துறந்து ஒன்றினைய வேண்டும். சட்டத்திற்கு முரணாக செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து  செயற்பட வேண்டும். சிங்கராஜ வனத்தை பாதுகாக்க சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தற்போது செயற்படுத்தியுள்ளோம். இதற்காக நாங்கள் ஐ.நா சபை மற்றும் சர்வதேச அமைப்புக்களிடம் முறையிட்டு தகுந்த நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வோம் என்றார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd