கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத் தலைவருக்கு தெரிவித்தாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் சட்டபூர்வமான கருத்துகளையும் விதிகளையும் பரிசீலித்தபின், அரசியலமைப்பின் அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்ததன் காரணமாக ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பதவி வெற்றிடம் குறித்து நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு அறிவித்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கு எதிராக ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.