web log free
January 11, 2025

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு என காவல்படை அமைத்த விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் நகர காவல்படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனும் உறுப்பினர் வ.பார்த்தீபனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன் அடிப்படையில் அங்கு சென்றிருந்தபோதே மணிவண்ணன் கைதாகியிருப்பதாக தெரியவருகிறது.

யாழ்.மாநகரசபைக்கு என காவல்படை ஒன்றை அமைத்தமை தொடர்பிலான சர்ச்சையின் தொடராக நேற்று முன்தினம் யாழ்.மாநகர ஆணையாளர் உட்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே.

குறித்த காவல் படைக்கு பயன்படுத்திய சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் பணியாற்றிய காவல்துறையினரின் சீருடையை ஒத்தது என்று நேற்றைய நாடாளுமன்ற அமர்வில்எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகள், கழிவகற்றல் பொறிமுறைகள் மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக குறித்த மாநகர காவல்படை உருவாக்கப்பட்டிருந்தது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd