யாழ்.மாநகர சபைக்கு என காவல்படை அமைத்த விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதான குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
நேற்று இரவு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனும் உறுப்பினர் வ.பார்த்தீபனும், யாழ்.மாநகரசபைக்கு என காவல்படை அமைத்த விவகாரம் தொடர்பிலான விசாரணைக்காக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆறு மணி நேரம் தொடராக இடம்பெற்ற விசாரணையின் தொடராக அதிகாலை 2 மணியளவில் மணிவண்ணன் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யமுயன்றார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்படுவதாக பார்த்தீபனி்டம் பத்திரம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட கட்சிகள் நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் குறித்த சம்பவத்தினை கண்டித்துள்ளன.
கனடாவில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி, ஒன்ராறியோ முதல்வர் உட்பட்ட அரசியல் பிரமுகர்களும் குறித்த நடவடிக்கையினைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே சட்டரீதியிலாக குறித்த விடயத்தினை அணுகுவதற்கு சட்டத்தரணிகள் தயாராகியிருப்பதாக தெரியவருகிறது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உறுப்பினர்கள் குறித்த சீருடை கொழும்பு மாநகரசபைச் சீருடையைப் போன்றது என்று சுட்டிக்காட்டி உரையாற்றியிருக்கின்றனர்.
யாழ் மாநகர மேயர் வி. மணிவன்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இந்நிலையில் இன்று மதியம் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.
பரிசோதனைகளின் பின்னர் கண்டி வீதியில் அமைந்துள்ள பயங்கரவாரத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் அவரிடம் இருந்த கணிணி உட்பட்ட உபகரணங்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
இதனிடையே மணிவண்ணனை பார்வையிடுவதற்காக பத்துக்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அலுவலகத்துக்கு சென்றிருந்த போதிலும், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் மணிவண்ணனின் சகோதரனும் சட்டத்தரணியுமான வி.திருக்குமரன் மட்டும் மணிவண்ணனை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.