web log free
January 11, 2025

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று அதிகாலை கைதாகிய அவர் வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டு பின் இன்று இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றில் அஜர்படுத்தப்பட்டார். இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில்,  2 இலட்ச ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் யூன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் வரி வசூலிப்பாளர்களுக்கு சீருடை வழங்கியமையை அடுத்து சர்ச்சை எழுந்தது. தமிழீழ காவற்றுறையின் சீருடையை ஒத்த சீருடையை வழங்கியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவினால் இன்று அதிகாலை 1.40 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மதியம் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு  அவர் அழைத்துச்செல்லப்பட்டார். 

பரிசோதனைகளின் பின்னர் கண்டி வீதியில் அமைந்துள்ள பயங்கரவாரத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிற்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டிருந்தார்.

சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர் முதல்வர் வி. மணிவண்ணன் இன்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்

இந்நிலையில் சற்றுமுன்னர் யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யாழ். முதல்வர் .சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd