தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியின் தாயார், பொலிஸாரின் நடவடிக்கை அசமந்தமாக இருப்பதாக தெரிவித்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (09) முறைப்பாடு செய்துள்ளார்
தமிழ் அரசியல் கைதியின் தாயாரான தே.தேவராணி, தனக்கு தொலைபேசி மூலம் பலர் அச்சுறுத்தல் விடுத்துவருவதாக நேற்று முன்தினம் கோப்பாய் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.
ஆனால், பொலிசார் தமது விசாரணையில் அசமந்தமாக இருப்பதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டில்.,
எனது மகன் கடந்த 15 வருட காலமாக அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டுள்ளார் இவரது விடுதலை தொடர்பாக தனியாக நானே போராடி வருகிறேன். தற்போது குரலற்றவர்களின் குரல் அமைப்பில் இருந்து கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறேன். அண்மைக்காலமாக எனது தொலைபேசிக்கு இனந்தெரியாத நபர்கள் அழைப்பை எடுத்து தகாத வார்த்தைகளால் பேசுவதுடன் எச்சரிக்கையும் செய்துவருகின்றனர்.
இதனால் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளேன். இதனால், எனது பின்ளையின் விடுதலை தொடர்பாக நான் எடுக்கும் முயற்சிகளும் தடைப்பட்டு போகிறது. இது வரை 07 தொலைபேசி இலக்கங்களில் இருந்து தவறான அழைப்புக்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக முறைப்பாடு செய்ய கோப்பாய் பொலிஸ்நிலையத்துக்கு சென்றேன். ஆனால், அங்கு எனது முறைப்பாட்டை முழுமையாக பெற்றுக்கொள்ளவில்லை. இரண்டு தொலைபேசி இலக்கங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். எனவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும், எனது பணியை பயமின்றி செய்யவும் உதவிசெய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழவில் உதவியை நாடியுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.