முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு 03 ஆம் கண்டம் வயல்வெளிப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள்.
நேற்று (15) மாலை வேளையில் முல்லைத்தீவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில், தண்ணிமுறிப்பு 03 ஆம் கண்டம் வயல்வெளிப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள்
குமுழமுனை மேற்கு 07ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 36 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை கிழக்கினை சேர்ந்த 31 அகவையுடைய ஒரு பிள்ளையின் தந்தையான வன்னியசிங்கம் யுகந்தன், வற்றாப்பளை கேப்பாபுலவு கிராமத்தினை சேர்ந்த 43 அகவையுடைய ஒரு பிள்ளையின் தந்தையான யோகலிங்கம் சுஜீபாகரன் ஆகியோர் உயிரிழந்துள்ளார்கள்.
இடிமின்னல் தாக்கத்தின் போது வயல் கொட்டிலில் நின்றவேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தடையவியல் பொலீசார், சட்டவைத்திய அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் முன்னிலையாகி விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். உடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது