web log free
January 11, 2025

குருந்தூர் மலையில் இந்துக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் - சுமந்திரன் எம்.பி

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தினைச் சந்தித்து கலந்துரையாடியதுடன்  வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்கள் சிலவற்றினைக் கையளித்திருந்தனர்.

இச் சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை சம்பந்தமாக சில வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு பிணக்கு ஏற்பட்டது. அது தொடர்பாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழக்கொன்று தாக்கல்செய்யப்பட்டு அதிலே ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்களத்தினர், அமைச்சரோடு வந்து அங்கே இருந்த வழிபாட்டுச் சின்னத்தை அகற்றி ஒரு புத்தர் சிலையை வைத்து புதியதாக தொல்பொருள் ஆராய்ச்சி என்று ஆரம்பித்துள்ளார்கள்.

ஆகையினாலே, இது தொடர்பாக வழக்கு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக, கடந்த 2018ஆம் அண்டு தாக்கல்செய்யப்பட்ட AR/673/18 என்ற வழக்கின் ஆவணப் பிரதியை முழுமையாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என்னிடம் கையளித்திருக்கின்றார்.

அந்தவகையில், இது தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகள், அதாவது அந்த இடத்திலே இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்வோம் - என்றார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd