தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தலைவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,அடிப்படைவாத அமைப்புகளை நாம் தடை செய்துள்ளோம். அந்த அமைப்புகளின் தலைவர்களை அழைத்து விசாரணைகளை மேற்கொள்கின்றோம். அவர்களின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குள் குறித்து நாம் அறிக்கைகளைப் பெற்று, நடவடிக்கை எடுக்கவுள்ளோம். உறுப்பினர்களுக்கு தொடர்ந்து செயற்பட முடியாது. அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. அவர்களுக்கு எதிராகவும் நாம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதுத் தொடர்பிலான அறிக்கையை சட்டமா அதிபருக்கு சமர்ப்பித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ள விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், சட்ட நடவடிக்கை எடுப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல எனத் தெரிவித்தார். “கர்தினால் அவர்களின் மனநிலையை புரிந்துகொள்ள முடியும். பொலிஸார் அல்லது அரசாங்கம் என்ற வகையில் யாருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. இதுத் தொடர்பில் சட்டமா அதிபரே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செய்க் மொஹமட் 18 வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. காரணம் இது இலகுவான விடயமல்ல, காரணம் அவர்களுக்கு சார்பாக மிகப்பெரிய சட்டத்தரணிகள் முன்னிலையாகின்றனர். அவர்கள் ஏதாவது ஒரு வழியில் தப்பிச் செல்வார்கள். ஆகவே, சட்டத்தின் ஓட்டைகளை முதலில் அடைக்க வேண்டும்” என்றார்.


