web log free
January 11, 2025

தற்போதைய அரசாங்கத்தில் ஊழலும், இலஞ்சமும் நிறைந்துள்ளது: இராதாகிருஷ்ணன் எம்.பி

தற்போதைய அரசாங்கத்தில் ஊழலும், இலஞ்சமும் நிறைந்து போயுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு இன்று (17) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது.

வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டின்போது, மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர். பெரியசாமி சந்திரசேகரனின் 64வது ஜனன தினமும் நினைவு கூறப்பட்டது.

இதன்போது, முன்னணியின் பிரதி தலைவர் ஏ.லோறன்ஸ், செயலாளர். எஸ்.விஜயசந்திரன், தேசிய அமைப்பாளர் ஆர்.ராஜாராம், இளைஞர் அணி அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, மலையகத்திற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கு கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் தலைமை தாங்கி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன்  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மலையக மக்கள் முன்னணி எப்போதும் வடக்கு கிழக்குடன் சுமூகமான தொடர்பை கொண்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் சிக்கியுள்ளது. எல்லாவற்றிலும் ஊழலும், இலஞ்சமும் நிறைந்துள்ளது.

அதேபோல், எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது. தேங்காய் எண்ணெய் போன்றவற்றிலும் கலப்படம் நிறைந்துள்ளது. சீனியில் ஊழல், பருப்பில் ஊழல் என அனைத்திலும் ஊழல் கலந்துள்ளது. தற்போது எமது கடல் வளத்தை மூடி சீனாவுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை விற்கும் செயற்பாடு எங்கு முடியப்போகின்றது என தெரியவில்லை. இதேவேளையில், சஜித்தின் தோல்விக்கு உட்கட்சி மோதலும் முக்கியமானது. அதன் பிறகுதான் சிறுபான்மை மக்களையும் இணைத்து ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. முன்னர் ஆட்சி பீடம் ஏறும் தரப்பினரை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் காணப்பட்டனர். ஆனால், இன்று சிறுபான்மையினர் துவேசம் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றனர். இப்போது உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாதுள்ளது. இதனால் இன்று உளுந்து வடை,தோசை போன்ற திண்பண்டங்களை சாப்பிட முடியாதுள்ளது. இன்றும் 1000 ரூபா சம்பளத்தை முழுமையாக சிலர் பெற்றுக்கொள்ளவில்லை. முக்கியமாக அரசாங்க தோட்டங்களில் 1000 ரூபா அதிகரிப்பு கொடுக்கப்படவில்லை. இன்று எல்லா சலுகைகளும் இல்லாது போயுள்ளது. தற்போதைய நிலையில் 1000 ரூபாவைக்கொண்டு உளுந்தை கூட வாங்க முடியாது. எனவே, எமது இளைஞர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd