web log free
January 11, 2025

மட்டக்களப்பு பறங்கியாமடுவில் 43 வீடுகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்துவைப்பு

சிறுசிறு உதவிகளைச் செய்துவிட்டு பெரிய விளம்பரம் தேடும் இவ்வுலகில் பாரிய உதவியை செய்துள்ள புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பினரைப் பாராட்டுகிறேன். சிலு சிலுப்பில்லாத பலகாரமாகவே இந்தசேவையைப் பார்க்கின்றேன் என  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் கிரான் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பறங்கியாமடுவில் 43 வீடுகளைத் திறந்துவைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பினர் மலேசியா தமிழர் பேரவை மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையோடு, பறங்கியாமடுவில் மணல் குடிசைகளில் அடிப்படை வசதிகளற்று வாழ்ந்து வந்த 43 குடும்பங்களுக்கு வீடுகளையும் மலசல கூடம், மின்னிணைப்பு வாழ்வாதார வசதிகளையும் செய்துகொடுத்துள்ளனர்.

அந்த வீடுகளின் திறப்பு விழா புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றி அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பின் சர்வதேசத் தலைவர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், கிரான் பிரதேச செயலாளர் ரி.ராஜ்பாபு, உதவிக் கல்விப் பணிப்பாளர், வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

அங்கு அரசாங்க அதிபர் கருணாகரன் மேலும் உரையாற்றுகையில்,

மனிதனின் அடிப்படைத்தேவைகளான உணவு உடை உறையுள் ஆகிய மூன்றுமில்லாமல் இன்னும் அநேகமான மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இந்த அடிப்படை வசதிகளற்று இன்றும் பல பிரதேசங்கள் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றன.

இந்நிலயில் இந்தப் பறங்கியாமடுப் பிரதேசம் காலாகாலமாக மணல் குடிசையோடு கடலை நம்பி அடிப்படை வசதிகளற்று வாழ்ந்து வந்தவர்கள்.

அதனை இனங்கண்டு இவ்வமைப்பினர் இன்று எவ்வித விளம்பரமுமில்லாமல் செய்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைச்சேவைக்காக மாவட்டத் தலைவர் என்ற வகையில் மனதாரப்பாராட்டுகிறேன். இதற்கு கைமாறாக இக்கிராம மக்கள் செய்யவேண்டியது என்ன? நீங்கள் முதலில் உங்கள் காணியைச்சுற்றி வேலி அமைத்து வாழை நடுங்கள், பூக்கன்றுகள் நடுங்கள், அப்போது உங்கள் கிராமம் சிரிக்கும். உங்கள் வாழ்க்கைப்பாங்கு அடுத்தகட்டத்திற்கு நகரும் என்றார்.

விழாவில் பயனாளிகளின் வீடுகள் நாடாவெட்டித் திறந்துவைக்கப்பட்டன. அதற்கான திறப்புகள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன. பொதுமக்கள் இவ் அமைப்பின் சேவைக்காக பிரதிதிகளுக்கு பொன்னாடைபோர்த்துக் கௌரவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd