அதிக விளைச்சலை பார்க்கிலும் உயிர்கள் எனக்கு மிகவும் பெறுமதியானது
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது மிக விரைவில் முற்றாக நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக விளைச்சலை பெற முடியும். குளங்கள், கால்வாய்கள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதால் உயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை அந்த இலாபத்தால் ஈடுசெய்ய முடியாது.
இரசாயன உரங்களின் தாக்கம் சிறுநீரக நோய் உட்பட பல தொற்றா நோய்களுக்கு வழிவகுத்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சிகிச்சைக்காக செலவாகும் தொகை மற்றும் உயிர்களுக்கு ஏற்படும் தாக்கம் அதிகம். ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த பிரஜையை உருவாக்குவதற்கு, நச்சு அல்லாத உணவுக்கான மக்களின் உரிமையை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும். இந்த நோக்கத்திற்காக நாட்டின் விவசாயத்துறையில் சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் (22) கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க சபைகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
நாட்டில் சேதன உர உற்பத்தியை அதிகரிக்க அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். உர மானியத்திற்கு பதிலாக சேதன உரத்தை பெற்றுக்கொடுக்க திட்டமிடுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். உர இறக்குமதிக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் 400 மில்லியன் டொலர்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட முடியும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தன்னை அதிகாரத்திற்கு தெரிவு செய்ததன் மூலம் மக்கள் கொள்கை சார்ந்த மாற்றத்தை எதிர்பார்த்தனர். நாட்டிற்காக அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அனைவரின் ஆதரவும் தேவை என்று ஜனாதிபதி அவர்கள் கூறினார்.
எத்தனோல் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டதன் மூலம் இலங்கை சீனி நிறுவனம் ரூ. 1100 மில்லியனை இலாபமாக பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக சாதாரண மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுமார் 2500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் பதவி உயர்வு மற்றும் போனஸ் ஆகியவற்றைப் பெறவும் முடிந்தது என்று இலங்கை சீனி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
நிறுவனங்கள் அடைய வேண்டிய இலக்குகள் தொடர்பில் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் தெளிவாகக் கூறுப்பட்டுள்ளது. அமைச்சரவை, இராஜாங்க அமைச்சுகளுக்கு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அடைய வேண்டிய முன்னேற்றம் ஆகியவை பற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. கூட்டுப் பொறுப்புடன் பணியாற்றி மக்கள் விரும்பும் கொள்கை மாற்றத்தை அடைய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி அவர்கள் தலைவர்களிடம் கூறினார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.