நுவரெலியா, இராகலை மாகுடுகல - கிளன்டவன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23) முற்பகல் நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் இராகலை சூரியகாந்தி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத மலையக அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவற்றை வலியுறுத்தும் வகையிலான பதாதைகளையும் தோட்டத் தொழிலாளர்கள் ஏந்தியிருந்தனர்.
உரிய பராமரிப்பின்மையால் மாகுடுகல - கிளன்டவன் தோட்டம் காடாக மாறியுள்ளது. இதனால், தேயிலை பயிர்ச்செய்கை அழிவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காட்டை சுத்தப்படுத்தி தருமாறும், நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிலாளர்கள் கடந்த இரு மாதங்களாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இத்தோட்டங்களுக்கு சென்ற பல அரசியல் பிரமுகர்களும், உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்தனர். அந்த உறுதிமொழி இன்றளவிலும் நிறைவேற்றப்படவில்லை. தோட்டத்தை பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகமும் அசமந்தமாக செயற்படுகின்றது. இந்நிலையிலேயே தமக்கு விரைவில் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.