முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயல் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் அக்கரைப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வட்டுவாகல் கிராமத்தைச் சேர்ந்த சந்திரமோகன் நிஷாந்தன் (வயது 19), இதேவேளை சம்பவத்தில் படுகாயம் அடைந்த செல்வக்குமார் சயந்தரூபன் (வயது 20) என்பவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதன்போது இரு இளைஞர்கள் காயமடைந்திருந்ததுடன் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தில் 19, 20 வயதுடைய இளைஞர்கள் இருவரே காயமடைந்திருந்தனர். இதன்போது 19 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பகுதி அண்மையில் சுத்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் , தொடர்ச்சியான மழைக்காரணமாக பூமிக்குள் புதைந்து கிடந்த பொருட்கள் சில வெளியில் தென்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் , கடந்த யுத்தகாலத்தின் போது புதைத்துவைக்கப்பட்டிருந்த ஏதேனும் பொருளில் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும் விசேட நிபுணர்களின் பரிசோதனையின் பின்னரே அதனை உறுதியாக தெரிவிக்க முடியும். இந்நிலையில் விசேட நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.