கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர் விட்ட பிழைகளை நானே தீர்த்து வைக்கிறேன் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நான் வந்து ஒரு வருட காலம் தான். சொன்னதை எல்லாம் செய்துள்ளேன். எனது தேர்தல் விஞ்ஞாபனம் இன்னமும் உங்கள் வீட்டில் இருக்கும். நீங்கள் போய் எடுத்து பாருங்கள். ஆயிரம் ரூபா எடுத்து தருவதாக சொன்னேன் அதனையும் முடித்து காட்டியுள்ளேன் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12 தனி வீடுகளை கட்டி அமைக்க நேற்று (25) அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.
இதில் இராஜாங்க அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தலைமை தாங்கி அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்போது இவ் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
குறித்த ஒரு வீட்டிற்கு 13 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது. இந்த நிதி உதவியை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு வழங்குகின்றது.
அத்தோடு ஒரு வீட்டில் 2 அறைகள், குளியலறை மற்றும் மலசலகூடம் என அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீடும் தனித் தனி வீடுகளாக கட்டப்படுகின்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மேலதிக கிலோ போன்றவற்றினை தொழிற்சங்க பலத்தினை வைத்து பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம் பல்கலைக்கழகத்திற்கான அடிப்படை வேலைகள் நடந்து முடிந்துள்ளன. இன்று தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையும் பெற்றுக்கொண்டுள்ளோம். 16 தேசிய பாடசாலைகளையும் உருவாக்கியுள்ளோம்.
3 வருடமாக இழுபறி நிலையில் இருந்த உதவி ஆசிரியர் நியமனத்தினையும் முடித்து கொடுத்துள்ளேன். இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தேன் இன்று குறித்த வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளேன்.
கடந்த நல்லாட்சியில் போது இந்திய அரசாங்கம் பெற்றுக்கொடுத்த 4000 வீடுகளில் 699 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மீதி வீடுகள் கட்டப்பட்டு இருந்தாலும் அவற்றிக்கு நீர் மின்சாரம், வீதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாக இன்று கையளிக்காமல் அப்படியே உள்ளன.
இதனை யார் செய்ய வேண்டும். நான்கு வருடம் அமைச்சராக இருந்த போது கட்டிய வீடுகள் என்றால் அதனை அவர் தானே முடித்திருக்க வேண்டும். இப்போது சொல்கிறார்கள் அது அரசியல் பழிவாங்கல் என்று.
நான் இந்த அமைச்சினை பொறுப்பேற்ற பின் அந்த வீடுகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். செப்டெம்பர் மாத இறுதிக்குள் அதனை நிறைவு செய்து விட்டு இந்திய அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுத்த 10,000 வீடுகளையும் அடுத்த மாதம் அளவில் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இன்று சிலர் நான் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என்று சொல்கிறார்கள். பல ஆண்டு காலமாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் தற்காலிக குடியிருப்புக்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போது அவர்களுக்காக 300ற்கு மேற்பட்ட வீடுகள் கட்ட ஆரம்பித்துள்ளோம். ஆகவே, எதிர்காலத்தில் எமது மக்களுக்கு என்னென்ன தேவையிருக்கிறதோ அவை அனைத்தையும் எதிர்வரும் காலங்களில் செய்து முடிப்பேன் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.