கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பிலுள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை கொழும்பில் வைத்து இன்று சந்தித்திருக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபின், பிரான்ஸ் தூதுவர் ரீட்டா குலியானா மாநெல்லா, ஜேர்மான் தூதுவர் ஹோல்கர் சூபர்ட், ரோமேனியாத் தூதுவர் விக்டர் சூடியா உட்பட பல்வேறுபட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் இந்த அழைப்பை ஏற்று எதிர்கட்சித் தலைவரது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
சுமார் ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் உலகளாவிய ரீதியில் பொருளாதார நிலைமை, அதற்கு சமமாக இலங்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள் என பல்வேறு விடயங்களை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சில திட்டங்கள் குறித்து தனது கருத்தை பதிவுசெய்திருக்கும் சஜித் பிரேமதாஸ, அதன் பலவீனமான நிலைமைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை, சிவில், பொருளாதாரம், சமூகம், அரசியல், ஆன்மீகம், மத மற்றும் கலாசார உரிமைகளைப் பலப்படுத்துவது குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.